எஸ்.பி.பி பாடிய ”ஜாதி மல்லி பூச்சரமே.. சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையில் பாதிபலம்” - உள்ளிட்ட எஸ்.பி.பி யின் பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார்.தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார். அவரது நினைவாக அவர் வாழ்ந்த காம்தார் நகரின் பெயரை எஸ்.பி.பி நகர் என மாற்றி கெளரவித்தது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் மறைந்த இசை மேதை எஸ் பி பாலசுப்ரமணியனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி மதுரையில் நடைபெற்ற விழாவில் அவரது பாடல்களை பாடி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசை மேதை எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
மறைந்த இசை மேதை பத்ம விபூஷன் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ் காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசுதேவன், கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
எஸ்.பி.பி., யின் பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆடிட்டர் சேது மாதவா மற்றும் வாசுதேவன் வழங்கினார்கள். தொடர்ந்து பாடகர்கள் ஜோசப், பரணி மகேஷ், வைபவ் மகேஷ் உள்ளிட்டோர் எஸ்.பி.பி பாடிய ஜாதி மல்லி பூச்சரமே.. சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையில் பாதிபலம் உள்ளிட்ட எஸ்.பி.பி யின் பாடல்கள் பாடி பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய பிறகு மலர்களால் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.