முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.



அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும்; தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும்; முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை பல்வேறு வகையான நூல்களுக்கான பிரிவுகளும் அமையவுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல பிரம்மாண்டமாக அமையும் இந்த நூலகம் தென் தமிழகம் முழுமைக்கும் பயனுள்ள வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருக்கு பேருதவியாக இருக்கும்.

 





இந்தியாவிலேயே முதன் முறையாக புதிய கட்டுமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி 8 தள கட்டிடங்களை 8 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் ஒரே கட்டிடம் இது தான் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கினறனர். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.



 

இந்நிலையில் ”மதுரைக்கு தேவையான  திட்டம் கொண்டுவராமல் அப்பாவின் பெயரில் 100 கோடிக்கு நூலகம் கட்டிவருகிறார்.” என கலைஞர் நூலகம் குறித்து மேலூர் எம்.எல்.ஏ.,வின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

 


 













இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலளித்தார்..,”எவ்வளவு பழக்கவழக்கங்கள் மாறினாலும் இன்னும் கண்ணாடி பார்த்துதான் தலை சீவுகின்றோம், அதுபோல தான் புத்தக வாசிப்பும்.. தற்போதைய டிஜிட்டல் காலத்தில் தான் அதிகமான புத்தகங்கள்  வாசிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.