காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி பகுதியில் உள்ள காந்தி அரையாடை ஏற்ற இடத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


காந்தி ஜெயந்தி விழா


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி பகுதியில் உள்ள காந்தியடிகள், அரை ஆடை ஏற்று இடத்தில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவசிலைக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் தினேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன் மற்றும் தளபதி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு அமைந்துள்ள காந்தி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மாற்றுப்பாதைகளை ஏற்பாடு செய்ய கோரிக்கை


இதனையடுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்த, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு விற்பனையில் வைக்கப்பட்டுள்ள விற்பனை பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் காந்தி நினைவாலயத்தின் வெளியில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையம் விரிவாக்கத்தில் மதுரையில் இருந்து செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு செல்வதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை எளிமையான முறையில் செய்வதற்காக மாற்றுப்பாதைகளை ஏற்பாடு செய்வது குறித்து விமான நிலைய இயக்குனரிடம் பேசி உரிய முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.


மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு







அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நுாற்பு நிலையம் 1-ம், உசிலம்பட்டி கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன. கிராமிய நுாற்பு நிலையத்தில் 25 ராட்டைகள் மற்றும் கதர் உபகிளையில் 15 தறிகளும் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்படும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை

 

மேலும் கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் ரூ.29.51 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கிராமப் பொருட்கள் ரூ.24.76 லட்சம் மதிப்பீட்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 314 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வதாரமாக தலா ரூ.5000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் ஆகிய இடங்களில் 02.10.2024 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.