கூடல் நகர் இரயில் நிலையத்தில் சரக்கு வாகன நிறுத்தக் கட்டணம் ரத்து: எனது கோரிக்கையை ஏற்ற தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு நன்றி.
மதுரை எம்.பி - சு. வெங்கடேசன் எம்.பி - வெளியிட்ட செய்தி குறிப்பு
கூடல் நகர் இரயில் நிலையத்தில் சரக்கு வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது...," தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் மற்றும் பிற வாடிக்கையாளர்களிடமிருந்து எனக்கு வந்துள்ள புகாரின்படி, கூடல் நகர் பார்சல் அலுவலகத்தில் பார்சல்களைப் பதிவு செய்ய மற்றும் பெற்றுக்கொள்ள வரும் வாகனங்களிடம், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்க இரயில்வே நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களிடம் மாதம் குறைந்தபட்சம் ரூ. 4,500 வாகன நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மீது பெரும் சுமையைச் சுமத்துவதோடு, சில நேரங்களில் அவர்கள் செலுத்தும் இரயில்வே முன்பதிவுக் கட்டணத்தை விடவும் இது அதிகமாக உள்ளது.
இரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும்.
வணிக நலன் கருதி வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவது இரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். இத்தகைய கட்டணங்கள் வாடிக்கையாளர்களைப் பிற இரயில் நிலையங்களுக்கும் அல்லது பிற போக்குவரத்து முறைகளுக்கும் மாறத் தூண்டும். சரக்கு முன்பதிவு செய்யும் முகமைகள், தங்கள் வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாகன நிறுத்தத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஏற்கனவே இரயில்வே துறை தனது பார்சல் மற்றும் சரக்கு வணிகத்தை சாலைப் போக்குவரத்திடம் இழந்து வரும் சூழலில், இந்த வாகன நிறுத்தக் கட்டணம் வாடிக்கையாளர்களை ஊக்கமிழக்கச் செய்கிறது. எனவே, வணிக மற்றும் வாடிக்கையாளர் நலன் கருதி, இந்த வாகன நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாடிக்கையாளர்கள் இரயில்வே வளாகத்திற்குள் கட்டணமின்றி வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.”
தெற்கு இரயில்வே நிர்வாகம்
எனது இந்தக் கடிதத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே நிர்வாகம், ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரயில் பெட்டிகள் (Rake) வந்து நிற்கும் சமயத்தில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் பணியில் ஈடுபடும் லாரிகளிடம் எவ்விதமான வாகன நிறுத்தக் கட்டணமும் (Entry fee) வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
