மேலும் அறிய
மதுரை வைகையாற்றில் கள்ளழகர், முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்.. 1.5 டன் பூக்கள் மூலமாக அலங்கரிக்கும் பணிகள் தீவிரம் !
வைகையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓட தொடங்கியுள்ளது. ஆற்றிற்குள் லட்சக்கணக்கான மக்கள் கூடவுள்ள நிலையில் மூன்றடுக்கு தடுப்பு வேலிகள் அமைப்பு.

சித்திரைத் திருவிழா
Source : whats app
மதுரை வைகையாற்றில் நாளை அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் - 1.5 டன் பூக்கள் மூலமாக மண்டகப்படிகள் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்.
சித்திரைத் திருவிழா 2025
உலகப்பிரசித்திபெற்ற மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக நேற்று மாலை கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பாடாகி மூன்றுமாவடி, கோ.புதூர், டிஆர்ஓ காலனி வழியாக ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் எழுந்தருளினார். பின்னர் இன்று மாலை 3.30 மணி முதல் மீண்டும் அவுட்போஸ்ட், தல்லாகுளம் வழியாக கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கும் எதிர்சேவை விடிய விடிய நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தல்லாகுளம் பிரசன்ன வெங்காடஜலபதி கோயிலில் இரவு 11.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தி்ல் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த பின்னர் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழந்தருளி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை தங்க குதிரை வாகனத்தில் தல்லாகுளம் பகுதியில் உள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்காக புறப்படவுள்ளார். பின்னர் விழாவின் சிகர நிகழ்வாக நாளை அதிகாலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறும்.
1.5 டன் மலர்கள் அலங்காரம்
இந்நிலையில் இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் ஆற்றுப்பகுதியில் இந்து அறநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோயில் சார்பில் லாலாசத்திர மண்டகப்படி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த மண்டகப்படியை 1.5 டன் மலர்கள் மூலமாக அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. கள்ளழகர் எழுந்தருளும்போது வைகையாற்று பகுதியில்அதிகளவு தண்ணீர் வெளியேறிவருவதால் ஆற்றிற்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வைகையாற்று பகுதிக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக ஆழ்வார்புரம் மற்றும் நெல்பேட்டை ஆகிய வைகையாற்று கரையோர பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் கள்ளழகர் தங்கு குதிரை வாகனத்தில் எழுந்தரும் ஆற்றுபகுதியில் வர்ணம் பூசும் பணிகள் முடிவடைந்து கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பபடுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு
கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் அமெரிக்கன் கல்லூரி மற்றும் செல்லூர்சாலை, வைகையாற்று பகுதியில் மேம்பால தூண்கள் முழுவதுமாக தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் மேம்பால பணிகளுக்காக வைக்கப்பட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டு முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது. கிருதுமால் நதி கால்வாய் அமைந்துள்ள பகுதி முழுவதிலும் மிகப்பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள பக்தர்கள் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்திற்கு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆழ்வார்புரம் பகுதி முதல் தீர்த்தவாரி நடைபெறக்கூடிய ராமராயர் மண்டகப்படி வரை முழுவதும் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் மட்டும் வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. கள்ளழகர் எதிர்சேவை, மற்றும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பகுதி முழுவதிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படுகின்றன.
சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் லோகநாதன்..,” கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கான 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
Advertisement
Advertisement





















