ராணுவ பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டவரை பணியில் மீண்டும் சேர்க்க கோரிய வழக்கில், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத்தில் கொண்டு மனுதாரர் ராணுவத்தில் ஜேஏஜி திட்டத்தில் சேர்க்கப்படுவார் என நீதிமன்றம் நம்புகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த எஸ்.அஜய் ஜஸ்டிஸ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "பிளஸ் 2 முடித்து 2007-ல் ராணுவத்தில் சேர்ந்தேன். பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் 2009-ல் பங்கேற்ற போது எனக்கு கழுத்து மற்றும் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை சரியாக செய்யப்படாததால் மேலும் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு 4 வாரம் மருத்து விடுப்பில் சென்றேன்.

 

இந்நிலையில் பணப்பலன் மற்றும் மாத உதவித் தொகை வழங்கி மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். அதன் பிறகு என்னை பணியில் சேர்க்கவில்லை. பணித் தொடர்ச்சி வழங்கி மாற்றுப்பணி, இழப்பீடு அல்லது ஓய்வு பெற்ற ராணுவவீரர் அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மனுதாரர் வழக்கு நிலுவையில் இருந்த போது சட்டப்படிப்பு படித்துள்ளார். இதனால் ராணுவத்திலுள்ள ஜட்ஜ் அட்வகேட் ஜெரனரல் பணிக்கு மனுதாரரை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

மத்திய அரசு தரப்பில், மனுதாரரும், அவரது பெற்றோரும் ராணுவ விதிகள் மற்றும் ஒப்பந்தத்தை மீறி வேறு எந்த சலுகையும் கேட்கமாட்டோம் என உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர். மனுதாரருக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வரை மாத உதவித் தொகை பெற்று வருகிறார். அவருக்கு மாற்றுப்பணி வழங்க முடியாது என்றார்.

 

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு மற்றும் ஆர்வத்தை காட்டுகிறது. நாட்டிற்காக சேவையாற்றும், நாட்டை பாதுகாக்கும் கனவுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டிற்கு தேவை. இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்காகவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கலாம். எனவே, மனுதாரரின் சட்டப்படிப்பை கருத்தில் கொண்டு அவரை ஜேஏஜி திட்டத்தில் சேர்க்க பரிசீலிக்க வேண்டும். இதற்காக நிபந்தனைகளை தளர்த்தவும் பரிசீலிக்க வேண்டும். மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத்தில் கொண்டு மனுதாரர் ராணுவத்தில் ஜேஏஜி திட்டத்தில் சேர்க்கப்படுவார் என நீதிமன்றம் நம்புகிறது என உத்தரவில் கூறியுள்ளார்.