ஆகஸ்ட் 6 ஆம் தேதி  பாஜக சார்பில் விருதுநகர் ஜவுளி பூங்கா குறித்து விழிப்புணர்வு பாதயாத்திரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி பாஜக பாத யாத்திரை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், மாநில அரசு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான   நிலத்தையும் ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் வைத்துள்ளனர். எனவே, இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்காக பாஜக சார்பில் 1000 பேர் பாதயாத்திரை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சாந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். பாதயாத்திரை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்தார் இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சிவகாசியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 27 கிலோமீட்டர் குறுகிய பாதையை உள்ளது. இதனால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பாதயாத்திரை செல்லும் பாதையில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், பாஜக சார்பாக பல பாதயாத்திரைகள் நடத்தப்பட்டுள்ளது எனவே பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என தெரிவித்தனர்.


இதனையடுத்து நீதிபதிகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை பாதயாத்திரை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 300 நபர்கள் சிவகாசியில் இருந்து 2 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை ஆகவும், அதன் பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வாகனத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் 10 நபர்கள் மட்டும் சென்று மனு அளிக்க உத்தரவிட்டார்.


 




மற்றொரு வழக்கு






கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

 

சுவாதிகா மற்றும் மற்றொரு மாணவர் (Guigwangngam),  திருச்சி KAP விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது வழங்கிய, சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்கள் KAP விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பிற்காக சேர்ந்துள்ளனர். சேர்க்கையின் போது தமிழ்நாடு அரசுக்காக 2 ஆண்டுகள் பணியாற்றுவது தவறினால், 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். படிப்பை வெற்றிகரமாக முடித்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் மனுதாரர்கள் பணியாற்ற விரும்பவில்லை. அதனால் அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ்கள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது அடமான பொருட்களாகவும் கொள்ள இயலாது. ஆகவே, மாணவர்களின் அசல் சான்றிதழ்களை எவ்வித காலதாமதமும் இன்றி ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.