காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பரிந்துரை குழுவில் தகுதி இல்லாத நபர்களை நீக்கக்கோரிய வழக்கு குறித்து யூ.ஜி.சி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கணப்படிப்பு துறைத்தலைவராக பணியாற்றி உள்ளேன். 

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். தற்போது உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட கன்வீனராக உள்ளேன். இதன்மூலம் பல்கலைக் கழகங்களில் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வியும், சமூக நீதி கிடைக்கவும் போராடி வருகிறோம். பல்கலைக் கழகங்களின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு மாற்றங்களை யு.ஜி.சி. கொண்டு வந்துள்ளது. 

 

அந்த வகையில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், அங்குள்ள துணைவேந்தர், டீன்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பரிந்துரை குழுவில் உள்ளவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஆடிட்டர் ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது சட்டவிரோதம் மேலும் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களுக்கு முரணானது.

 

இவர்கள் தகுதியான துணைவேந்தரை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. எனவே, குழுவில் பேராசிரியர்கள் அல்லாத சிலரை நீக்கி, அந்த இடங்களில் தகுதியான பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து யூ.ஜி.சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.