Madurai Hc ; பாஸ்போர்ட் புதுப்பித்தல் சிக்கல்..? நீதிமன்ற அனுமதி கட்டாயம்: மதுரை அமர்வு தீர்ப்பின் முழு விவரம் !
”பாஸ்போர்ட் புதுப்பித்தலும், புதிய பாஸ்போர்ட் வழங்குவது போலவே சட்ட விதிகளுக்கு உட்பட்டது” - எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பாஸ்போர்ட் புதுப்பித்தலும், புதிய பாஸ்போர்ட் வழங்குவது போலவே சட்ட விதிகளுக்கு உட்பட்டது- மதுரை அமர்வு உத்தரவு.
பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல்
கோவையை சேர்ந்த ஜவகர் ராஜன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி, கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, " மனுதாரர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். காவல்துறையின் அறிக்கையில், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாக இருந்ததால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த குற்றப்புகார் பொய்யானது என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் விளக்கம் அளித்தும் அவரது மனு ஏற்கப்படவில்லை. எனவே அந்த நோட்டீசை ரத்து செய்து, பாஸ்போர்ட்டை மீண்டும் புதுப்பித்து தரக்கோரி இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அனுமதியை பெறாமல் பாஸ்போர்ட்டை புதுப்பிக்குமாறு மனுதாரர் கோர இயலாது.
பாஸ்போர்ட் சட்டத்தின் படி குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், பாஸ்போர்ட் வழங்க மறுக்கலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதி இருந்தால், பாஸ்போர்ட் வழங்க வழியுள்ளது. ஆகவே குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள், பாஸ்போர்ட்டை பெற சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம். ஆகவே மனுதாரருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அனுமதியை பெறாமல் பாஸ்போர்ட்டை புதுப்பிக்குமாறு மனுதாரர் கோர இயலாது. பாஸ்போர்ட் புதுப்பித்தலும், புதிய பாஸ்போர்ட் வழங்குவது போலவே சட்ட விதிகளுக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.























