அட்டாக் பாண்டி ஜாமீன் கேட்ட மனுக்கள் தள்ளுபடி:  பொட்டு சுரேஷ் கொலை வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.   

பொட்டு சுரேஷ் படுகொலை 
                                                                                             
மதுரை சத்யசாய்நகரை சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவரை கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி அன்று அவரது வீட்டின் அருகில் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் சேர்க்கப்பட்டனர். 8-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மும்பையில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை 2 ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.
 
அட்டாக் பாண்டிக்கு ஆயுள்தண்டனை
 
இதற்கிடையே பத்திரிகை அலுவலகத்தை எரித்த வழக்கில் அட்டாக் பாண்டிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரை நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் சில வழக்கிலும் அவர் கைதானார். ஆயுள்தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, ராமகிருஷ்ணன் என்பவரை கொல்ல முயன்ற வழக்கு ஆகியவற்றிலும் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
 
இதற்கிடையே பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது. இந்தநிலையில் அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்தார். அப்போது, மனுதாரரின் ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.