மீன்பிடி திருவிழா
மாங்குளம் கண்மாய் மீன்பிடி திருவிழா -2025
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கண்மாய், சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் இங்கு மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கிராமத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பகுதி கிராம பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து காலை முதல் கண்மாய் கரையில் காத்திருந்த மீன்பிடி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தினர், அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாயில் இறங்கினர். கச்சா, ஊத்தா கூடை, கொசுவலை, மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் மீன்களை பிடிக்க துவங்கினர்.
நாட்டு வகை மீன்கள் சிக்கியது
இதில் கட்லா, ரோகு, சிலேபி, அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை சில நிமிடங்களிலேயே பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இந்த மீன்பிடித் திருவிழாவில் நத்தம், பழையசுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நாவினிப்பட்டி, வல்லாளபட்டி, கீழையூர், மலம்பட்டி, சேக்கிபட்டி, பொன்னமராவதி சருகுவலையபட்டி, தனியாமங்கலம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது போன்ற மீன் பிடித் திருவிழாக்கள் நடத்தப்படுவதன் மூலம் தங்களது பகுதியில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
பாரம்பரியம் காக்கும் மீன்பிடி திருவிழா
மேலும் மீன்பிடிக்க வந்த இளைஞர் மங்கலாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் பேசினோம்..,” மதுரை மாவட்டத்தில் மேலூர் சுற்றுவட்டாரங்களில் அதிகளவு மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும். மதுரை சுற்றுவட்டாரங்களில் கடல் பகுதி இல்லை என்பதால் கண்மாய், ஏரி, குளங்களில் மீன்பிடிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். பல்வேறு ஊர்களில் திருவிழா சமயத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படும். அன்று ஒருநாள் சுற்றுவட்டாரங்கள் அனைத்து வீடுகளிலும், மீன்குழம்பு வாசம் தான் இருக்கும். இந்நிலையில் இன்றைய மீன்பிடி திருவிழா சிறப்புமிக்கதாக அமைந்தது. நிறைய வகையான மீன்கள் எங்களுக்கு கிடைத்தது. வளர்ப்பு மீன்களின் வருகையை குறைத்து நாட்டு வகை மீன்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். இது போன்ற மீன்பிடி திருவிழாக்கள் நாட்டு வகை மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து மீன்பிடி திருவிழாக்களை பொதுப்பணித்துறையும் ஊக்குவிக்க வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டார்.