சாலை விபத்துகளுக்கு வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது ஒரு முதன்மை காரணம்:  மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் 2025 தரவு சுட்டிக்காட்டுகிறது.

சாலை விபத்திற்கு காரணம் என்ன
 
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அதிகவேகம் மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது ஆகிய காரணங்களுடன், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் நிகழ்ந்த 1525 சாலை விபத்துகளின் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நேர்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 
 
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்
 
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 11 முதல் 17, 2026 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் இம்மருத்துவமனையால் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி ஊடகங்களிடம் பேசிய மருத்துவமனையின் அவசரசிகிச்சை மருத்துவக் குழு நிபுணர்கள்...,” கடந்த ஆண்டு தரவுகளின்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்தனர். சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ள வயது பிரிவைச் சேர்ந்த இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை இன்னும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மொத்த விபத்து நேர்வுகளில் (தினசரி சராசரியாக 4 விபத்துகள்), வழங்கப்படும் சிகிச்சை 56% எலும்பியல் துறையையும், 20% நரம்பியல் அறுவை சிகிச்சையையும், 11% பிளாஸ்டிக் சர்ஜரி்யையும் சார்ந்துள்ளன. விபத்துகளின் போது, எலும்புகள், தலை மற்றும் மென்மையான திசுக்களில் ஏற்படும் கடுமையான காயங்களின் அபாயத்தை இந்த தரவு எடுத்துக் காட்டுகிறது.
 
சாலை விபத்துகள் இந்தியாவில் ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்னையாக
 
இது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைதுறைத் தலைவரும், இயக்குநருமான டாக்டர் நரேந்திர நாத் ஜெனா கூறுகையில், "சாலை விபத்துகள் இந்தியாவில் ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பது  எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் என்பதை இந்த விழிப்புணர்வு வாரம் நினைவூட்டுகிறது. நாங்கள் தினமும் குறைந்தது நான்கு முதல் ஐந்து சாலை விபத்து நேர்வுகளை கையாளுகிறோம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் தான் சாலையைப் பயன்படுத்தக்கூடியவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், சாலை விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அவசரத்தேவை இருக்கிறது," என்றார்.
 
சாலைப் பாதுகாப்பு
 
மேலும் அவர் கூறுகையில், "சாலைப் பாதுகாப்பு என்பது அடிப்படையில் மனித உயிரைக் காப்பதாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 4.7 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்கின்றன; இதனால் கிட்டத்தட்ட 1.7 லட்சம் நபர்கள் உயிரிழக்கின்றனர், பல லட்சம் நபர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது, அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டாமல் இருப்பது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது மற்றும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவது அவசியம். உயிர்களைக் காப்பாற்ற அவசரநிலை சேவைகள் எப்போதும் தயாராக இருந்தாலும், விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான நடத்தையே விபத்துகளை தடுப்பதற்கான மிகச்சிறந்த ஆயுதம். சாலைப் பாதுகாப்பு என்பது, நமது மக்களின் தினசரி நடைமுறையாக மாறவேண்டும்,” என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
கோல்டன் ஹவர்
 
விபத்துக்காயங்களுக்கான சிகிச்சைகள் குறித்து மேலும் விளக்கமளித்த டாக்டர் ஜெனா, "அதிகப்படியான ரத்தப்போக்கு அல்லது சுவாசக் கோளாறுகள் காரணமாகவே விபத்துகளில் இறப்புகள் முக்கியமாக நிகழ்கின்றன. இவை இரண்டையும் விரைவாக கையாள்வதற்கு எங்கள் துறை எப்போதும் தயாராக உள்ளது. வலுவான அவசர சிகிச்சைப் பிரிவு, பைக் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் வலையமைப்பு கொண்ட விபத்துக்காய சிகிச்சை மையமாக (tertiary trauma care centre) நாங்கள் இருப்பதால், அண்டை மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் எங்களை அணுகுகின்றனர். பைக் ஆம்புலன்ஸ்களில் வரும் துணை மருத்துவக் குழுவினர் முதலில் சென்று விபத்து நடந்த இடத்திலேயே சிகிச்சையைத் தொடங்குகின்றனர்; அதைத் தொடர்ந்து மருத்துவர் தலைமையிலான நான்கு சக்கர ஆம்புலன்ஸ்கள், விபத்து நிகழ்ந்த இடங்களை சென்றடைகின்றன.  சர்வதேச நெறிமுறைகளின்படி, நோயாளி மருத்துவமனைக்கு வந்த 15 நிமிடங்களுக்குள் அவர்களை நிலைப்படுத்தி, 'கோல்டன் ஹவர்' சிகிச்சையை வழங்குவதை விபத்துக்காய சிகிச்சை நிபுணர்கள் குழு உறுதி செய்கிறது," என்றார்.