மதுரை  மூன்றுமாவடியை அடுத்த சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 64) என்பவர் மதுரை மாநகராட்சியில் சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் சீட்டு சேர்ந்து ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் கட்டி உள்ளார். இந்த தொகைக்கு பொய்கைகரைப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள தனது நிலத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி அவர் நிலம் எழுதி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம், இதுபற்றி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது சுப்பிரமணியம், தான் பணம் கட்டியதற்கான ஆவணங்களை காண்பித்தார். 



விசாரணை முடிவில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வாங்கி கொண்டு நிலத்தை கொடுக்காதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவுன்சிலர் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். ஜெயச்சந்திரன் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தி.மு.க வில் இருந்தால்தான் பாதுகாப்பு எனக்கருதி  சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுக கட்சியில் இணைத்துகொண்டார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் கோ.தளபதி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்துவந்தார்.



 

இதனையடுத்து திமுக கட்சி கொடியுடன் அறிவிக்கப்படாத தி.மு.க., கவுன்சிலராக வலம் வந்த நிலையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிலங்களை மோசடியாக விற்க முயற்சித்ததாக இவர் மீது புகார் உள்ளது. இதுபோல் சில காவல்நிலையத்திலும்  மோசடி புகார்கள் உள்ள நிலையில் அது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.