மதுரையில் தீபாவளியை முன்னிட்டு மாநகர் முழுவதிலும் தேங்கிய பட்டாசு மட்டும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
குப்பை அகற்றும் பணியை தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது நேற்று காலை முதல் இரவு வரை வெடித்த பட்டாசுகளின் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் உணவு கழிவுகள், அட்டைகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான மதுரை மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆண்டுதோறும் தீபாவளியின் மறுநாள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேங்கிய பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்
அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி விளக்குத்தூண் பகுதியில் தேங்கிய பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிணைந்து தூய்மை பணியாளர்களுக்கு உதவியுடன் வகையில் விளக்குத்தூண், மாசி வீதிகள் காமராஜர் சாலை, சித்திரை வீதீகள், ஆவணி மூல வீதிகள், வெளிவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மை பணியாளர்களுக்கு உதவினர்.
வாலிபர் சங்கத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்
இந்த தூய்மை பணியினை மாநகராட்சி மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இதேபோன்ற மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
