பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை முன் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.  

இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை
 
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தங்க பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் தனது மனைவி தங்க பிரியாவை வரதட்சனை கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஆடியோ ஒன்று வெளியானது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  தங்க பிரியா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பூபாலன் அவரது தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரது மனைவி விஜயா மற்றும் தங்கை அனிதா உட்பட பலபேர் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை செய்தல், கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ்  அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 
முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல்
 
பூபாலனின் தந்தை செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமின் கோரி‌ மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
நீதிபதி விசாரணை  
 
அந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மோகன்குமார், முத்துக்குமார், மகேஸ்வரி ஆகியோர் ஆஜராகி கைது செய்யப்பட்ட பூபாலனின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டராக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் பணிபுரிந்து வருகிறார். அவர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.  இதற்கிடையில் வரதட்சணை கேட்டு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தவறானது.  திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.  இதுவரை எவ்வித புகார் இல்லாத நிலையில் வேண்டுமென்றே பொய்யாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி வரதட்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளை சமூக நலத்துறை மட்டுமே விசாரிக்க வேண்டும்.  அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்ற தங்க பிரியா அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகி விடு திரும்பிவிட்டார். வழக்கு பதிவு செய்வதற்காகவே அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எவ்வித மருத்துவ அறிக்கையும் இல்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அவர்கள் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளதற்கான புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தனர். பூபாலன் தரப்பில் எவ்வித வரதட்சணையும் தங்க பிரியாவிடம் கேட்கவில்லை. என்பதே உண்மை. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறி அரசின் சலுகைகளை பெற்ற தங்க பிரியாவின் தந்தை குடும்பத்தினர் 60 பவுன் வரதட்சனை நகைகள் போட்டிருப்பதாகவும் சீர் வரிசைகள் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. ஆகவே தங்க பிரியா அடுத்த பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை முன் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.  
 
முன் ஜாமின் வழங்கி உத்தரவு
 
அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி முன் ஜாமீன் வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை மாவட்ட அமர்வு  நீதிபதி சிவகடாட்சம் போலீஸ்காரர் பூபாலனின் தந்தை மற்றும் தாய்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.