மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "மனுதாரரின் முன் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவு.
மானாமதுரை டி.எஸ்.பி மனுத்தாக்கல்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமின் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நிகிதா என்பவர் தனது நகைகள் காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல்துறையினர், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
குற்றவாளிகள் பெயரில் டி.எஸ்.பி பெயர்
அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட துணை அறிக்கையில் எனது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதால், என்னை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன்.
மனு தள்ளுபடி
ஆகவே இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தடுக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "மனுதாரரின் முன் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.























