வைகையில் 72 இடங்களில் மதுரை மாநகர கழிவுநீர் முழுமையாக கலக்கிறது. இதனை தடுப்பதற்கு உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மாறாக மக்கள் மீது குற்றம் சுமத்துவதை கைவிட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
வைகை ஆற்றில் ஆய்வு
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக மே 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக மே-8 தேதி முதல் 1000 கன அடி நீரானது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் வைகையாற்றில் தொடர்ச்சியாக கழிவு நீர் கலப்பதால் நீரின் தன்மை மாசுபடுவது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர்.
மதுரை மாநகருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
”சித்திரை திருவிழா திருவிழா நடைபெற உள்ள நிலையில் வைகை ஆற்றுப்பகுதியில் எந்த ஒரு தூய்மைப்பணிகளும் எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளழகர் எழுந்தருள கூடிய முகப்பு பகுதியிலேயே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவக்கூடிய வகையில் அமைந்துவிடக்கூடாது. சென்னையில் நடைபெறக்கூடிய விழாக்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் மதுரை மாநகருக்கும் கொடுக்கப்பட வேண்டும். சென்னையிலிருந்து உயர்மட்ட குழுவை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யவில்லை.
வைகை ஆற்றில் 72 இடங்களில் மதுரை மாநகர கழிவுநீர் முழுமையாக கலக்கிறது. இதனை தடுப்பதற்கு உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மாறாக மக்கள் மீது குற்றம் சுமத்துவதை கைவிட வேண்டும். வைகை அணை தூர்வாருவதற்கு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு பெரும் வெள்ள காலங்களில் வெளியேற்றப்படும் நீரோடு சேர்த்து மண்ணை வெளியேற்றுவதற்கு முன்வர வேண்டும். வைகை, தாமிரபரணி பேச்சிப்பாறை, பெருஞ்சாணை உள்ளிட்ட நீர்ப்பாசன திட்ட பராமரிப்புக்கு 4 ஆண்டாக திமுக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பொதுமக்கள் கழிவு நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தான் தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் செலுத்தி வருகிறார்கள். கட்டிடங்களுக்கான அனுமதி கொடுக்கும் போது கழிவு நீர் கால்வாயை அமைக்க வேண்டியது மாநகராட்சி பொறியாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் அதை கண்காணிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குற்றத்தை சுமத்தி கால்வாய்கள் ஆறுகளாக மாறுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்க்காமல் இருக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டே கேட்காத முதலமைச்சர் விவசாயிகளின் பொருளுக்காக செவி சாய்க்க போகிறார்?...” என்று பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.