மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்க அனுமதி சான்று பெற்றால் மட்டுமே அனுமதி என சமீபத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 100 ரூபாய் கட்டணம் வசூலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா - உணவுபாதுகாப்புத்துறை அறிக்கை
மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் மற்றும் இதர இடங்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் ஆகியவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.
குப்பை மேலாண்மை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பை தொட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் கோடை காலத்தை முன்னிட்டு, அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்கள் ஆகியவற்றிலும் தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ரூ.100- கட்டணம்
மேலும் திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.100- கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து இணைய மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அன்னதனாம் கொடுக்கும் நபர்களுக்கு எதற்கு 100 ரூபாய் கட்டணம். சேவை செய்ய கட்டணம் பெறுவது மிகவும் மோசனமான செயல் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
கட்டண அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர், வழக்கறிஞர் மதுரை கணேஷ்குமார் தெரிவிக்கையில்..,” மதுரை சித்திரைத் திருவிழா பாரம்பரியமானது. திருவிழாவில் சாதி, மதங்கள் கடந்து அன்னதானம், நீர் மோர் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்குவதும் வழக்கம். இதனை உணவுப் பாதுகாப்புத்துறை முறைப்படுத்த நினைக்கிறது. இதில் சிக்கல் இல்லை, வரவேற்கிறோம். ஆனால் அன்னதானத்திற்கு பதிவு செய்யும் நபர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நியாயமற்றது. இது அன்னதானம் வழங்கும் நபர்களுக்கு தொய்வை ஏற்படுத்தும், இது தேவையற்றது. சேவை செய்யும்நபர்களுக்கு அபராதம் அளிப்பது போல் உள்ளது. எனவே கட்டணம் பெறும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்” என்றார்.