மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் அரசு மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்துவருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓ.பி.சி., அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில்  உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில்  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர். அப்போது சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில் அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அப்போது அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

 


 

இதையடுத்து அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.  இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்னையில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்துவருகின்றனர். சக்திவேல் இன்று காலை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக மாவட்ட செயலாளர் சக்திவேலின் கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் காவல்துறை உடனடியாக வெளிப்படையான விசாரணையை நடத்த வலியுறுத்தியிம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் மதுரை அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









 

அப்போது தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுசீந்திரன் மதுரையில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது காவல்துறை சிறப்பாக செயல்பட்டது தற்பொழுது காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டுவருகிறது . பாஜக மாவட்ட செயலாளர் சக்திவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.