மேலும் அறிய
சிறுமி மது வீடியோ: அரசியல் பழிவாங்கலா? வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு
மனுதாரர் மீது பதியப்பட்ட பிரிவுகள் எதுவும் ஏற்புடையவை அல்ல எனக் கூறி வழக்கை ரத்து செய்து மதுரை அமர்வு உத்தரவு

மதுரைக் கிளை
புகார் அளித்தவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர். மனுதாரர் வேறொரு கட்சியை ஆதரிப்பவர் என்பதால் அரசியல் காரணத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது- நீதிபதி.
வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாரர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார்.
திருச்சியைச் சேர்ந்த சவுதாமணி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில், சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததற்காக, தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, "திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், கடந்த 2024 மார்ச் 5ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், மனுதாரர் தெரிவித்த கருத்தை பார்த்து புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் பள்ளிச் சீருடையில் மூன்று சிறுமிகள் மது பாட்டில்களை பிடித்து குடிப்பது காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக மனுதாரர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீது புகார் அளிக்கப்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாரர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார்.
வழக்கை ரத்து செய்ய வேண்டும்
மனுதாரர் தரப்பில், "சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவிற்கு கருத்து தெரிவித்ததற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதுல ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அரசுத் தரப்பில், "அந்த காணொளியில் சிறுமிகளின் முகங்கள் தெளிவாக தெரிவதால், அவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சிறுமிகளின் தனி உரிமை மீறப்பட்டுள்ளதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டம்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டம், சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்களின் அடையாளங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என தெளிவாக தடை விதிக்கிறது. ஆனால் இந்த வழக்கில் மனுதாரருக்கு இதில் நேரடி தொடர்பில்லை. X தளத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளி. அதில் தமிழக ஆட்சி மற்றும் நிர்வாகம் குறித்து மனுதாரர் கருத்து தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 77 சிறார்களுக்கு மதுபானம் அல்லது போதைப்பொருள் வழங்குவது குறித்து பேசுகிறது. ஆனால் இந்த வழக்கில் மனுதாரர் சிறுமிகளுக்கு மதுபானம் வழங்கியவர் அல்ல. எனவே இளஞ்சிறார் நீதிச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப சட்டம் தனி உரிமை மீறலை குறிக்கிறது. ஆனால் அந்த காணொளியை மனுதாரர் பகிரவில்லை. ஆகவே இந்த பிரிவின் கீழான குற்றச்சாட்டும் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் புகார் அளிக்கவுமில்லை. புகார் அளித்தவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர். மனுதாரர் வேறொரு கட்சியை ஆதரிப்பவர் என்பதால் அரசியல் காரணத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளும் ஏற்புடையவை அல்ல. ஆகவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























