ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் சென்றதால் செல்போன் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்த கடைகளில் பரவி பல லட்சம் மதிப்பிலான செல்போன் எலெக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தது.
மதுரையில் ஆயுதபூஜை விழா
ஆயுதபூஜையை முன்னிட்டு மதுரை மாநகர் மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பஜாரில் அமைந்துள்ள 184 ஆம் எண் கொண்ட செல்போன் விற்பனை கடையில் ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் மாலை சென்றுள்ளனர். இந்நிலையில் விளக்கில் தீயானது காற்றில் பரவ தொடங்கி கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.
நீண்ட நேரம் தீயை தண்ணீர் தெளித்து அணைத்தனர்
மேலும் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த மூன்று கடைகளில் பரவத் தொடங்கிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து பெரியார் பேருந்து நிலையம் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தீயை தண்ணீர் தெளித்து அணைத்தனர்.
பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் சேதம்
பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் 4 செல்போன் கடைகளில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் வீணாகி பரபரப்பை ஏற்படுத்தியது.