உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பா.நீதிபதி., அதிமுக சார்பில் கடந்த 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது வரை அதிமுகவின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் எம்எல்ஏ வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்ய மனு மீதான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
இந்த சூழலில் இன்று காலை 8 மணி முதல் உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள எம்எல்ஏ நீதிபதி வீட்டில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், அவரது ஆதரவாளர்களும் வீட்டின் முன்பு குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.