மதுரையில் பிரமிக்க வைத்த ஆரோக்கிய உணவுத் திருவிழா... அரிசி, பருப்பு கோலங்கள் & சத்தான உணவுகள்!
நவதானிய பொருட்களால் உருவாக்கப்பட்ட தானிய லட்டு, கவனிஅரிசி அல்வா, கட்லட், பாதம் மையோனஸ் என பார்வையாளர்களுக்கு ருசிக்காக இலவசமாக வழங்கிய சத்துணவு ஊழியர்கள்.

அரிசி, கொண்டக்கடலை, துவரம் பருப்பால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் உருவ கோலம், பழங்கள் காய்கறிகளால் மீனாட்சியம்மன் கோலம் என தேசிய ஊட்டசத்து மாத விழாவை முன்னிட்டு நடந்த ஆரோக்கிய உணவுத்திருவிழாவில் மாவட்ட ஆட்சியரை பிரமிக்க வைத்த உணவுப்பொருட்களால் ஆன கோலங்கள்.
உணவுப்பொருட்கள் செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆரோக்கிய உணவுத்திருவிழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் குழுவினர் நவதானியங்களால் உருவாக்கிய லட்டு, அல்வா போன்றவற்றை ருசி பார்த்தார். அப்போது தானியங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்கள் செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
1000 நாட்கள் வளர்ச்சி குறித்த கோலம்
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரிசி, பருப்பு, கொண்டக்கடலையால் உருவாக்கப்பட்ட விநாயகர் கோலம், திராட்சை, தக்காளி கோவக்காய் உள்ளிட்ட காய்கறி பழங்களால் உருவாக்கப்பட்ட மீனாட்சியம்மனின் தானிய கோலம், இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த கோலம், குழந்தைகளின் 1000 நாட்கள் வளர்ச்சி குறித்த கோலம் , நொறுக்கிதீனிகள் தீமை, தானியங்களின் நன்மை போன்றவற்றை எடுத்துரைக்கும் கோலம் என பல்வேறு கோலங்களை நேரில் பார்வையிட்டு் சிறந்த கோலமிட்ட அங்கன்வாடி வட்டார ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் பாராட்டுகளை தெரிவித்தார்.
கருப்பட்டியால் உருவாக்கப்பட்ட கோலா குளிர்பானம்
இந்த ஆரோக்கிய உணவுத்திருவிழாவின் போது நவதானியங்கள், சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட தானிய லட்டு, கருப்பு கவுனிஅரிசி அல்வா, கட்லட், பாதம் மையோனஸ் சத்துமாவு குளோப்ஜாமுன், ராகி நூடுல்ஸ், வரகுலட்டு, தோசை, முருங்கை கீரை லட்டு, பழையசோறு கருவாடு, வரகு பாஸ்தா, நூடுல்ஸ், கம்பு ஜிகர்தண்டா, கருப்பட்டியால் உருவாக்கப்பட்ட கோலா குளிர்பானம் ஆகியவற்றை அங்கன்வாடி ஊழியர் பார்வையாளர்கள், பொதுமக்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆரோக்கிய உணவு திருவிழாவில் விதவிதமான தானியத்தால் செய்யப்பட்ட கோலங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முக்கியம்
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்...,” ஆரோக்கிய உணவுத் திருவிழாவில் தானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலான கோலங்கள் வரையப்பட்டிருந்தன. இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் அவசியம் என்பதை எடுத்துரைக்கும் வகையாக இந்த உணவு திருவிழா நடைபெற்றுள்ளது, பாராட்டுதலுக்குரியது. குழந்தைகள் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.





















