காய்கறிகள் மற்றும் பழங்களில் தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் வரைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி  மாவட்ட  தேர்தல் நடத்தும்  அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேனி அல்லி-நகரம் நகராட்சி,   உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் வரைந்து விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட  தேர்தல் நடத்தும்  அலுவலர்  மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஷஜீவனா தலைமையில் இன்று (03.04.2024) நடைபெற்றது.




33.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத்தேர்தல்-2024 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேனி மாவட்டத்தில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, கிராமிய நடனம், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




அதன்படி இன்றைய தினம் தர்பூசணியில் தேர்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவம்,  ஸ்வீப் லோகோ,  100% வாக்களிப்போம், 18 வயது முதல் வாக்காளர்கள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு படங்களும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு எனது உரிமை, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, தேர்தல் தேதி, நம் வாக்கு நம் உரிமை, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, மக்களைத் தேர்தல் – 2024 போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் தர்பூசணி, காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வடிவமைத்து வாக்காளர்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.




உழவர் சந்தையில் உள்ள சிறுவியாபாரிகளிடம்   ஜனநாயக திருவிழாவில் கலந்து கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்டாண்டில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன்  புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்