தேனி பாராளுமன்ற தேர்தல்:


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.




வேட்பாளர்கள் பரப்புரை:


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேச்சாளர்கள், திரைதுறையினர் என பல்வேறு தரப்பில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் பாஜக கூட்டணி கட்சி அமமுக கட்சி  சார்பாக டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக பாஜக சார்பில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.




அமித்ஷா வருகை ரத்து:


தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோட் ஷோ நிகழ்ச்சி பிரச்சாரம் செய்வதற்காக நாளை மாலை தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது. இதற்காக தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான எலிபேட் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள் அதன் பின் நின்று ரோட் ஷோ நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அமித் ஷாவின் கான்வே வாகனம் செல்வது போன்று போலீசாரின் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை காரணமாக தமிழகம் வரும் அமித் ஷா பயணம் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமித்ஷாவின் அடுத்த கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.