தேனி மாவட்டம் சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். இவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 20 வார்டில் திமுக கூட்டணியும்,6 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது.


இதில் 25வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற அய்யம்மாள் என்பவரை திமுக சார்பில் நகராட்சித்தலைவர் பதவிக்கு அக்கட்சி தலைமை போட்டியிட அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி நேற்று நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த 19வது வார்டு உறுப்பினரான செண்பகம் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார்.முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வது வார்டு உறுப்பினரான அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுக்களில் 16 ஓட்டுக்கள் பெற்று  நகர்மன்றத் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.




இந்த நிலையில் சின்னமனூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் 6 பேர் திமுக நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் திமுக நகர்மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததால் சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் உட்பட   ஏழு பேர் 6 வார்டு உறுப்பினர்களை  அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்து நீக்கம் செய்தது.



இந்நிலையில் இன்று திமுகவிற்கு விசுவாசமாக வேலை பார்த்த அதிமுக உறுப்பினர்களை , அதிமுக தலைமை உடனடியாக தலையிட்டு அவர்களை நீக்கம் செய்ததை பாராட்டி சின்னமனூர் அதிமுக தொண்டர்கள் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து  ஒட்டியுள்ளனர். சின்னமனூர் அதிமுகவினர் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில்,"  கம்பம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன்  ஆணைக்கிணங்க சின்னமனூர் நகரத்தை திமுக கைப்பற்ற உதவிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமைக்கு நன்றி நன்றி நன்றி" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அதிமுகவினர் ஒட்டியது கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.