1.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அ.தி.மு.க யூனியன் சேர்மனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க 6 கவுன்சிலர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 2 அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்து ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு செய்துள்ளனர்.
2. இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின் நிலையம் அமைத்து விரிவுபடுத்த நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்களை ஒப்படைக்க விவசாயிகள் யாரும் முன்வராத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தோல்வி அடைந்தது.
3. மதுரையில் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு.
4. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பலரும் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்றும் விசாரணை தொடர உள்ளது.
5. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
6.பரிசுப்பொருளை ஏலம்போட்டு கங்கைக்கு கொடு, பாரதத்தை ஏலம்போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொடு. இது தான் ஒன்றிய அரசின் பொது முழக்கம் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளார்.
7.சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தன் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்ய மனு அளித்துள்ளார். நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
8.தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்," அரசால் சீல் வைக்கப்பட்ட மினரல் நிறுவனத்தின் குடோனில் இருந்து இலுமினைட் மினரல் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரினார். இது தொடர்பான வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
9. சிவகாசி அருகே சரஸ்வதி பாளையம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சின்ன பொட்டல்பட்டியை சேர்ந்த தொழிலாளி சின்ன முனி யப்பன் 60,பலியானார். இந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 27 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74335-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72973 -ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1163 இருக்கிறது. இந்நிலையில் 199 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய மதுரை மண்டல கொரோனா அப்டேட் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு; விருதுநகரில் 16 பேர்!