தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.

Continues below advertisement

உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெற்றது‌. கடந்த 4ம்தேதி அதிகாலை கணபதி வழிபாட்டுடன் முதல்காலை யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை 6ம்கால யாகவேள்வி நடைபெற்றது. 21 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு,  நன்மங்கள இசை, தேவாரம், திருவாசகம், கந்தபுராணம் ஆகியவை ஓதுவார்களால் இசைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை 4மணிக்கு ஆறாம் கால யாக வேள்வி தொடங்கியது.

Continues below advertisement

இன்று அதிகாலை புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவரான அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம், இராஜ கோபுரம் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. தொடர்ந்து திருச்சுற்று தெய்வங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.45 மணியளவில்  மூலவர் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த 4ம்தேதி முதல் தொடங்கி இன்று நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இந்திகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.