மன்னார் வளைகுடா கடல் பகுதியில் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதி வரையிலும் இந்திய மீனவர்கள் அதிகமாக மீன் பிடிக்க வருவதாக புகார் வருகின்றது.  இதனால் இலங்கை கடற்படையினரின் தொல்லைக்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஆளாகி வருகின்றனர். ஆகவே பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இந்த  ஆண்டு கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்களில் சிலர் மட்டுமே மீனவர்கள் மட்டுமே அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் மற்றவர்களிடம் அடையாள அட்டை இல்லாமல் இருந்ததாகவும் இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, மீனவர்கள் அடையாள அட்டை அல்லது பயோமெட்ரிக் அடையாள அட்டையுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும். இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் போது பெரும்பாலான மீனவர்கள் படகுகளில் விளக்கை அணைத்து விட்டு மீன் பிடித்து வருகின்றனர். இப்படி மீன் பிடிக்கும் சமயத்தில் ரோந்து கப்பல்கள் ஏதும் வரும் பட்சத்தில் படகு கடலில் இருப்பது தெரியாததுடன் எதிர்பாரதவிதமாக கப்பல் படகு மீது மோத நேரிடும். என்பன உள்ளிட்ட பல விசயங்களை கடைப்பிடிக்க  தொடர்ந்து  இந்திய கடற்படையினர் மீனவர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.




ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து நேற்று 500க்கும் அதிகமான மீன்பிடி விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நடுக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவும், மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கவும், இந்திய கடற்படையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில்  இன்று அதிகாலை ராமேஸ்வரம் கடற்படை துறைமுகத்திலிருந்து  ரோந்து பணிக்கு சென்ற இந்திய கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடலில்  மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகுகளை  சோதனை செய்தனர். அப்போது மண்டபத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் சோதனை செய்தபோது படகில் இருந்த மீனவர்கள் மீனவ அடையாள அட்டை இல்லை, மீன் பிடிக்க வரும்போது தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச் சீட்டும் இல்லை.  இதனையடுத்து படகுடன் மீனவர்களை பிடித்த இந்திய கடற்படையினர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.




விசாரணையில் மீனவர்கள் தங்களது அடையாள அட்டைகளை வீட்டில் வைத்து இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து உரிய ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு படகுகளுடன் மீனவர்கள் அழைத்துச் செல்லுமாறு மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்திய கடற்படை வீரர்களால் பிடிக்கபட்ட படகில் தடை செய்யப்பட்ட வலைகள் அல்லது தடைசெய்யபட்ட போதை பொருட்கள் உள்ளதா என ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். வடகிழக்குப் பருவமழை துவங்க இன்னும் சில மாதங்களே உள்ளதால் அப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை பேரிடர்களில் சிக்கி நடுக்கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவர்களை அடையாளம்  காணவும், மீனவர்களுக்கு அரசால் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். எனவே, மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டுகளை படகில் வைத்துக் கொள்ளுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.