மதுரை மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 98பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்படைந்துள்ளனர். மாவட்ட முழுவதிலும் 225 பேர் காய்ச்சலுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட டெங்கு காய்ச்சல் பரிசோதனையில் 25-ம் தேதி வரை 98 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. 98 பேரில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் , சிறுவர்களுக்கும் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த மாதத்தில் தொடக்கத்தில் தலா 2 பேருக்கு டெங்கு பரவல் இருந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.




 


மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சார்பில் வெளியிட்டுள்ள தகவலில்..,” தமிழ்நாட்டில் தற்போது அதிக மழைப்பொழிவு காரணத்தினால் பருவமழை கால நோய்கள் ஏற்பட்டுள்ளன குறிப்பாக டெங்கு மற்றும் காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவரைக சற்று அதிகரித்து காணப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துகுடி, காஞ்சிபுரம், திருவாரூர், கோவில்பட்டி செய்யார் கடலூர். செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்தந்த பகுதிகளிலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் குறைந்தது 1000 காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்குச் சென்று ஆங்காங்கே மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த உள்ளனர். மேலும் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பொதுமக்களுக்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள். மேலும் 805 RBSK நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காய்ச்சல் கண்ட மாணவர்களின் விவரத்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர பள்ளி வளாகங்களில் ஏடீஸ் கொசுக்கள் வளராமல் தடுக்க கொசுப்புழு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் புகை மருந்து அடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சத்துணவு மையங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் சத்துணவு மையங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள காய்ச்சல் தடுப்பு முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவும், சுய சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னரே தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடத்தப்பட்டது, அதன்பிறகு 18.09.2023 அன்று எனது தலைமையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக வருகிற அக்டோபர் மாதம் 1 ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.