இந்தியாவின் சிலிக்கான் வேலியாகவும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் பெங்களூர் நகரம் விளங்குகிறது. நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பெங்களூர் சென்று வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்  பணிக்காகவும், தொழில்துறை நிமித்தமாகவும் நாள்தோறும் பெங்களூர் பயணிக்கின்றனர்.

Continues below advertisement

இவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலான ஒரு போக்குவரத்து திட்டம் குறித்து அறிவிப்பு தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ், இந்தியாவின் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்படும் என்சிஆர்டிசி-இன் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் நகரங்களுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.

Continues below advertisement

முதன்முறையாக 2023 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே முதல் மண்டல விரைவு போக்குவரத்து ரயில்வே தடம் அமைக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது மொத்தம் 82 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த என்சிஆர்டிசி அமைப்பு பெங்களூரிலும் இதே போன்ற இதேபோல நான்கு வழித்தடங்களில் மண்டல விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

இதன்படி பெங்களூரு - ஹோஸ்கோடே - கோலார் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் , பெங்களூரு - மைசூர் இடையே 145 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம், பெங்களூரு - துமகுரு இடையே 60 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் என கர்நாடக மாநிலத்திற்கு உள்ளேயே மூன்று வழித்தடங்களும் , பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டை இணைக்க கூடிய வகையில் பெங்களூரு- ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 138 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு வழி தடமும் அமைக்கலாம் என பரிந்துரை வழங்கி இருக்கிறது.

இந்த ரயில் சேவை நமோ பாரத் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்கலாம் என்றும் இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடியவை என்றும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கும் என்சிஆர்டிசி அதிகாரிகள் தற்போது டெல்லியில் இயங்கும் நமோ பாரத் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களை வந்து நேரில் பார்வையிடும்படி கூறியுள்ளனர்.

இந்த ரயில் சேவை திட்டத்தால் பெங்களூருவில் மக்கள் நெரிசல் அதிகரிப்பது குறையும் என சொல்லப்படுகிறது. அதேவேளையில் இந்த நகரத்துடனான போக்குவரத்து இணைப்பு எளிமையாக்கப்படும் போது பெங்களூரு -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மேம்படும் . பெங்களூர் மற்றும் தமிழ்நாடு நகரங்களுக்கு இடையே வணிகப் போக்குவரத்து என்பது அதிகமானதாக இருக்கிறது. பெங்களூர் வளர்ச்சிக்கு ஏற்ப ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளன.