கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அப்பகுதி மக்களுக்கு ஒரு வித சிரமம்தான். கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து ஒரு வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்தது. அதன்பின் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்தது. இதனால், முண்டக்கை பகுதியில் வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வயநாடு, திருச்சூர், இடுக்கி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டியன் விடுமுறை அறிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, கேந்திரிய வித்யாலயா, அங்கன்வாடி மையங்கள், மதரசாக்கள், பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும். குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகள், நேர்காணல்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழையின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மெஹாஸ்ரீ விடுமுறை அறிவித்துள்ளார்.

மதரசாக்கள் என்பது (மதரஸாக்கள் என்பது இஸ்லாமிய கல்வி நிலையங்களை குறிக்கும்) மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை பொருந்தும். குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்கு விடுமுறை பொருந்தாது.இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். கேந்திரிய வித்யாலயா உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும். இழந்த பாட நேரத்தை ஈடுசெய்ய ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் தாலுகாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின் படி கேரளாவின் பல பகுதிகளில் ஜூன் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இடுக்கி, மலப்புரம், வயநாடு, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் 26.6.2025 இன்று கனமழை பெய்யும் சூழல் உள்ளது. மேலும்  அடுத்த இரண்டு நாட்களில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களின்  ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் சூழல் உள்ளது. எனவே இந்த வார இறுதியில் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், வானிலை அறிவிப்பை கவனித்து, அதன் படி முடிவை மக்கள் எடுக்கலாம்.