தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து தொடங்கிய மழை இன்று மாலை 4 மணி வரையில் கன மழை முதல் மிக கன மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார எல்லை பகுதிகளான போடி , குமுளி, கம்பம் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கன மழை பெய்தது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. கன மழை காரணமாக தமிழக , கேரள எல்லை சாலைகளான குமுளி வழிச்சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி மெட்டு பாதையில் பாறை விழுந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மூணார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணை நிலவரம்
தமிழக, கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று வரை வெறும் 300 கன அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3153.11 கன அடியாக அதிகரித்து வருகின்றது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 3479.40 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக இருந்து வருகிறது. இதனைத் தவிர்த்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்ததால் இன்று அதிகாலை முதலே அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் தொடர் தடை விதித்துள்ளனர்.மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் சுருளி அருவியின் ஆற்று பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்று பகுதிக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் கரையோரப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் செய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இருந்தால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.