(Source: Poll of Polls)
தேனி: கனமழை எச்சரிக்கை! சோத்துப்பாறை அணையில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு! சுருளி அருவியில் தடை!
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.

தேனி உட்பட தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழையின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கன மழை எதிரொலியாக, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியில் இருந்து 86 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 10 அடி உயர்வு. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும் பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 67 அடியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்து வந்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கி நேற்று காலை நிலவரப்படி 76 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று பகல் மற்றும் இரவு நேரத்தில் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் 76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 86.42 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாள் இரவில் 10 அடி உயர்ந்து உள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் தற்பொழுது 86.42அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 112கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு,தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் அதிக அளவில் பருவ மழை பெய்து அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.சுருளி அருவிப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.





















