தமிழ்நாட்டு முதலமைச்சரின் இரும்புக்கரம் துருப்பிடித்து போய் உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒட்டன்சத்திரத்தில் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ”தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சார பரப்புரை நடைபெற்றது, பிரச்சாரத்தில் பேசிய நைனார் நாகேந்திரன் தமிழகத்தில் தினந்தோறும் பத்து வயது குழந்தைகள் முதல் 70வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதாகவும் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள் அதிக அளவில் புழக்கத்தில் கொண்டு வந்து அதனை குற்றங்களையும் திமுக வினரே நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்,
முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு தமிழகத்தில் எங்கு தவறு நடந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் எனக் கூறிய நிலையில், தற்போது அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து இருப்பதாக தெரிவித்தார், சாத்தான்குளம் லாக்கப் டெத் நிகழ்விற்கு அதிமுக ஆட்சி முடியும் வரை போராடியவர்கள் தற்போது திமுக ஆட்சியில் தற்போது வரை 72 லாக்கப் டெத் மரணங்கள், 7500 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் அதனை திமுக கண்டு கொள்ளவே இல்லை எனவும் குற்றம் சாட்டினார்,
முதலமைச்சரின் ஒரே நோக்கம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக அமர வைப்பதற்காகவே கூட்டணிகளை இறுக பிடித்து வைத்திருக்கிறார்கள் எனவும், தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவதாக தெரிவித்தார், இந்நிலையில் திமுகவின் கூட்டணி வலுவிழந்து வருவதாகவும் வரும் பொங்கலுக்கு பிறகு அதிமுக பாஜகவின் கூட்டணி வலுப்பெற்று 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். நிகழ்வில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், உள்ளிட்ட பாஜகவின் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.