தமிழகத்தில் கடந்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. அதனை தொடந்து பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகர் மேயர்களுக்கான தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக தலைமை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பரவலாக தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான இடங்களை ஒதுக்கி இருந்தது. இருப்பினும் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினரே போட்டியிட்டு அப்பதவிகளை கைப்பறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

Continues below advertisement

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியினரின் இச்செயலை கண்டு கூட்டணி கட்சியினர் முன் கூனிக்குறுகி நிற்பதாகவும், கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகிகள் உடனடியாக அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பை தொடந்து திமுக நிர்வாகிகள் சிலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் பலர் இன்னும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமலே உள்ளனர்.  குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் நகராட்சி சேர்மேன் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சேர்மேன் பதவிக்கு காங்கிரஸை சேர்ந்த சற்குணம் என்பவர் போட்டியிட்டார். இருப்பினும் அவரை எதிர்த்து களம் கண்ட திமுகவை சேர்ந்த ரேணுபிரியா  என்பவர் சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிலரை அக்கட்சியில் இருந்து திமுக பொதுச்செயலாளர் நீக்கிய நிலையிலும், பலர் தங்கள் உள்ளாட்சி பொறுப்பை ராஜினாமா செய்யாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லிநகரம் சேர்மேன் பதவியை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க கோரி காங்கிரஸ் தரப்பில் இருந்து திமுகவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Continues below advertisement

திமுகவின் ரேணுப்பிரியா மற்றும் காங்கிரஸின் சற்குணம்

 திமுக நகர பொறுப்பாளர் பாலமுருகன் தனது மனைவி என்று ரேனுபிரியாவை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி திமுக சார்பில் வேட்பாளராக தலைவர் பதவிக்கு நிறுத்தி அவர் வெற்றியும் கண்டுள்ளார். ஏற்கனவே  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சற்குணம்  தலைவர் பதவிக்கு அறிவித்திருந்த நிலையில் திமுக கைப்பற்றியதால் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.  இந்த பிரச்சினையை விரைவாக முடிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினரிடம் உடன்பாடு எட்டப்படவில்லை.  கடந்த 10 ஆண்டுகளாக தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதிக்கம் அதிகமிருந்த நிலையில் அதற்கு எதிராக திமுக நகர செயலாளர் பாலமுருகன் பலமாக வேலை செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் நகராட்சியின் துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கலாம் என்று திமுக ஆலோசித்தது. ஆனால் அந்தப் பதவியில் இருக்கும் திமுகவின் வழக்கறிஞர் செல்வம் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் திமுகவின் சிக்கல் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் பதவி விலக போட்டி வேட்பாளர்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்த பட்டியலை தனக்கு அனுப்புமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார். அதில் பல்வேறு ஊர்களில் தெரிவிக்கப்பட்ட காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் தனது அதிரடியான நடவடிக்கையை ஸ்டாலின் தற்போதைக்கு ஒத்திவைத்திருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது.  

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண