திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியில், தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (46). நிதி நிறுவன அதிபரான இவர் வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஸ்டூடியோ நடத்தி வந்தார். மேலும் அவர், அரிமா சங்க துணைத்தலைவராகவும் இருந்து வந்தார். பாலசுப்பிரமணிக்கு திருமணமாகி, புவனேஸ்வரி என்ற மனைவியும், கதிர்வேல் என்ற மகனும், சோனியாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பாலசுப்பிரமணி, வேடசந்தூரில் நடந்த அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்க செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் அன்றைய தினம் நள்ளிரவு அவர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான நத்தப்பட்டி நோக்கி வந்தார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் பாலசுப்பிரமணி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி, தனது உறவினர்கள், நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணி குறித்து கேட்டார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே டொக்குவீரன்பட்டியில் இருந்து நத்தப்பட்டி தோட்டத்திற்கு செல்லும் மண் சாலையில், தென்னம்பிள்ளை தோட்டம் என்ற இடத்தில் பாலசுப்பிரமணி தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த பாலசுப்பிரமணியின் மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேஷ் தலைமையிலான தடயவியல், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவு மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கூம்பூர் போலீசார் பாலசுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், எரிந்த நிலையில் கிடந்த பாலசுப்பிரமணியின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் மூடி திறந்த நிலையில் இருந்தது. மேலும் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடந்தது. முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் பாலசுப்பிரமணியை வழிமறித்து தாக்கிவிட்டு, அதன்பிறகு அவர் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பாலசுப்பிரமணி, தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க்கை தானே திறந்து, அதில் தீயை பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்டாரா? என்ற சந்தேகத்தின்பேரிலும் விசாரணை நடக்கிறது என்றார். மோட்டார் சைக்கிளில் சென்ற நிதி நிறுவன அதிபர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்