கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விசாரணை குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. விசாரணையின்போது, தமிழக அரசு, தவெக தரப்பில் இருந்து பல்வேறு வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Continues below advertisement


 




மறுபுறம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் ஜாமீனிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகன் மற்றும் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய ஐந்து அடிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தவெக நிர்வாகிகள், பிரச்சார நிகழ்ச்சிக்கு சவுண்ட் சர்வீஸ் சேவை வழங்கிய ஆடியோ இன்ஜினியர், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கரூர் துயர சம்பவத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நிர்மல் குமாரை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்ப்பட்டி தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.எம்.நிர்மல் குமார் உள்ளார்.




கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை நீதிமன்றம் அளித்த உத்தரவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் எஸ்.எம் நிர்மல் குமார் கைது செய்யப்பட்ட நிலையில் இவருக்கு திண்டுக்கல் மாவட்ட ஜே எம் 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி அக்டோபர் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில் தற்போது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.