சிறுமியை நிலா பெண்ணாக தேர்ந்தெடுத்து விடிய விடிய வினோத வழிபாடு செய்த கிராம மக்கள்: காரணம் என்ன?

வேடசந்தூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக தேர்ந்தெடுத்து விடிய விடிய வினோத வழிபாடு செய்த கிராம மக்கள்

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அதன்படி கடந்த வாரம் நிலா பெண்ணை தேர்வு செய்வதற்கு வழக்கமாக நடைபெறும் சடங்குகளை தொடங்கினர். இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு பால் கொண்டு வந்தனர்.

Continues below advertisement


அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிறுமிகள் பல வகை சாதம் தயார் செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி சிறுமிகள் வழிபாடு செய்தனர். இந்த வினோத வழிபாட்டின் எட்டாவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு எட்டாவது நாள் வழிபாட்டில் தூங்காமல் இருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் சுதா தம்பதியின் 11 வயது மகள் யாழினி என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டாள். இதைத்தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த யாழினியை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து வந்து பூக்களை மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்தனர்.


சிறுமியின் தலை மற்றும் கைகளில் ஆவாரம் பூவை சுற்றி அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலைமீது வைத்தனர். அந்தக் கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக கோட்டூருக்கு அழைத்து வரப்பட்டார். ஊர் மக்கள் சார்பில் தாரை தப்பட்டை முழங்க சிறுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மியடித்து ஆண்கள், பெண்கள் பாட்டு பாடி சிறுமியை சுற்றி வந்தனர்.பின்னர் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்து அதில் சிறுமையை அமர வைத்து சடங்குகள் செய்தனர்.


அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். அதன்பின்னர் சிறுமியை அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்று கிணற்றின் படி வழியாக சிறுமியுடன் இறங்கினர்.அங்கு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டு அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து நிலா பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன் கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு ஏழு நாட்கள் அணியாமல் எறிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். இது போன்று செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஊரில் விவசாயம் செழிப்படைவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

Continues below advertisement