திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைபட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடை பெற்றது.இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர்,திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. உதவி இயக்குனர் திருவள்ளுவர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ராஜா, ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 490 காளைகள் ஆன்லைன் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 483 காளைகள் பங்கேற்றது. அதில் 7 காளைகள் தகுதி நீக்கம் செய்ததால் 476 காளைகள் பங்கேற்றன.
இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக்குமார் தலைமை யிலான மருத்துவ குழுவினர் 214 பேரை பரிசோதனை செய்து ஒரு சுற்றுக்கு 25 பேர் விதம் காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.இதை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் ஜெயபால், வி.ஏ.ஓ. சைமன் ஆகியோர் உடனிருந்தனர்.முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்க வில்லை.
அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமை யாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.இந்த ஜல்லிக்க ட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பிரிட்ஜ், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் பாலமேட்டைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் (வயது 26), புகையிலைப்பட்டியைச் சேர்ந்த பார்வையாளர் சந்தனம் (60), மாட்டின் உரிமையாளர் தனராஜ் (32), கணவாய்பட்டியை சேர்ந்த பூமிராஜ் (21), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் கிரேந்திரன் (21),புயல் எப்படிச் சேர்ந்த அகஸ்டின்(21), இன்பராஜ்(28),டேனியல்,(26), முளையூரை சேர்ந்த சின்னு(28) உள்ளிட்டவர்களை சேர்த்து 9 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மொத்தம் இந்த போட்டியில் 25 பேர் காயமடைந்தனர்.