தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்திலும் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக நாகல்நகர், திருச்சி சாலை, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி சாலை, அஞ்சலி ரவுண்டானா பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.




இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை மின்மோட்டார், பொக்லைன் எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். இதேபோல் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே தேங்கிய மழைநீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் 79.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று இரவு 7 மணி அளவில் திண்டுக்கல்லில் மீண்டும் மழை பெய்தது.


சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்த இந்த மழையால் நாகல்நகர் உள்பட நகரின் முக்கிய சாலைகளில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றிவிட்டோம் என்று நேற்று பகலில் நிம்மதியடைந்த நெடுஞ்சாலைத்துறையினரை, இரவில் பெய்த மழை அதிர்ச்சியடைய செய்தது. மழை பெய்யும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற தற்காலிக சீரமைப்பு பணிகளால் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.




எனவே முக்கிய சாலைகளில் வடிகால் வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பழனி, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் பனி மூட்டமாக காணப்பட்டது.




தொடர்ந்து மாலை திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதேபோல் அம்மையநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் எதிரொலியாக, அம்மையநாயக்கனூரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக ரெயில் சுரங்கப்பாதை வழியாக நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல், பெரியகுளம் ஆகிய ஊர்களுக்கு சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண