தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திரா 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ . பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு 10 CRPF துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தொடர்புபுடையதாக அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது மகனும், பழனி எம்.எல்.ஏவுமான செந்தில் குமார் மற்றும் மகள் இந்திரா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு அவரது மகன் மகள் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று காலை 7 மணி முதல் முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 11 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை குறித்து தகவல் அறிந்த அவரது தொண்டர்கள் மற்றும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் அவரது இல்லம் அமைந்துள்ள துரைராஜ் நகர் பகுதியில் குவிந்தனர்.
இதற்கிடையே அவர் வீட்டு வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் வாகனத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இட முயன்ற போது திமுகவினர் கோஷம் எழுப்பியதால் சோதனையிடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அமைச்சரின் வீட்டிற்குள் சென்று விட்டனர். இதன் பின்னர் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட்டு காரினை சோதனையிட அமலாக்கத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்த போது அமைச்சரின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலினை தலையில் ஊற்றி தீக்குளிக்கம் முயன்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கூடியிருந்த தொண்டர்கள் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதன் காரணமாக இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வாசல் முன்பு கூடி இருந்த தொண்டர்கள் பார்த்து அமைதியாக இருங்கள் சோதனை இடும் அதிகாரிகளுக்கு தொந்தரவு செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூடியிருந்த தொண்டர்களை உங்களது வீட்டுக்குச் செல்லுமாறு கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து வீட்டு வாசல் முன்பு திரண்டனர்.சுமார் 11 மணி நேர சோதனைக்கு பின்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு செய்து கிளம்பி சென்றனர்.