திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டி ஊராட்சி மங்களப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி பச்சையம்மாள் (48). இவர் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த PACL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முகவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து உடலில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவர் ஓடி வந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனையடுத்து தீயில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் பச்சையம்மாள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றிய நிலையில் அவருக்கு கீழே 70 பேர் சப்-ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017-ஆண்டு வரை பொதுமக்களிடம் வசூலித்த பணம் 4 கோடி ரூபாய் வரை பச்சையம்மாள் PACL நிறுவனத்தில் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் பச்சையம்மாளிடம் பணம் கொடுத்த சிலர் கடந்த சில மாதங்களாக  தாங்கள் கொடுத்த பணத்தை கேட்டு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த பச்சையம்மாள் தனது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பச்சையம்மாள் விரக்தி அடைந்து தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலேயே அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கணவர் மலைச்சாமி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த நத்தம் காவல் துறையினர் நத்தம் அருகே மங்களப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (55). கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (63), சிரங்காட்டுபட்டியை சேர்ந்த முத்துச்சாமி (50). சின்னையம்பட்டியைச் சேர்ந்த செல்லம் (58), உலுப்பகுடியை சேர்ந்த கண்ணன்(47), வீரப்பன் (52) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யூரை சேர்ந்த தயாளன் (45) ஆகிய 7 பேரை கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)