திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 03ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. நாளை பகல் சப்பறத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
இன்று (05.08.25) காலை முதல் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தை சார்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று புனித செபஸ்தியார் ஆலயத்தில் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிவர்த்தி செய்து கொடுத்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து. அதன் பின் கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் செல்கின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களை எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடி திருவிழாவிற்கு சாமி கும்பிட சென்ற குழந்தை இறப்பு
வத்தலகுண்டு அருகே ஆடி திருவிழாவிற்கு சாமி கும்பிட சென்ற இடத்தில் சமைத்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் ரசம் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவில் சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவரது இரண்டு வயது குழந்தை ஸ்ரீதரன் மற்றொரு குழந்தையுடன் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது அதே வேளையில் கோவில் அருகே பக்தர்களுக்கு சாப்பாடு செய்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் சமையல் செய்யும் பகுதிக்கு சென்று விளையாடிய போது கொதிக்க கொதிக்க அடுப்பிலிருந்து இறக்கி வைத்திருந்த ரசம் பாத்திரத்தில் குழந்தை ஸ்ரீதரன் எதிர்பாராத விதமாக தடுமாறி தவறி விழுந்தான் தீக்காயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை ஸ்ரீதரன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இதனை அடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சாமி கும்பிட சென்ற இடத்தில் கொதிக்கும் ரச பாத்திரத்தில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.