திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் அரங்கேறிய துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சின்ன அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவில் மற்றும் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், நள்ளிரவில் இந்த கோவில்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கையில் கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மர்ம ஆசாமிகள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களைப் பக்குவமாக உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்த ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் மிகத்தெளிவாகப் பதிவாகியுள்ளது. மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் கோவிலுக்குள் உலவும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து சின்ன அய்யம்பாளையம் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் நிர்வாகிகள் சார்பில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்ததுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணி, கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கோவிலுக்குள் புகுந்திருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் கோவில் பூசாரிகள் அங்கே தங்கிப் பணியாற்றவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சமீபகாலமாக கோவில்களைக் குறிவைத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதம் காக்கப்பட, இந்த கொள்ளையர்களை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பரபரப்பான இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.
