கொடைக்கானல் , ஊட்டிக்கு கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி
சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, வார நாட்களில் ஊட்டியில் 6000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று ஏப்ரல் 25ம் தேதி மீண்டும் நீதிபதிகள் என் சதீஷ்குமார் மற்றும் டி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊட்டிக்கு வார நாட்களில் 7000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 9000 வாகனங்களும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த நீலகிரி கூடுதல் ஆட்சியர், கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், ரோஜா கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தப்படும்.
எனவே கோடை காலத்தில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோடை கால விழாக்களின் போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவசியம் ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதே போல கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
குறிப்பாக ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கன்றனவா என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





















