கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற நோய் தொற்று இந்தியா உட்பட உலகையே அச்சுறுத்தியது. அதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று பரவி பல லட்ச மக்களின் உயிரை பறித்தது. பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 2022 இறுதிக்கு பிறகு கொரோனா தொற்று குறித்து எந்த செய்தியும் இல்லை. உலக நாடுகள் பழைய நிலைக்கு திரும்பின. மக்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் வர தொடங்கி உள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற இடங்களில் மக்கள் பாதிக்கப்பட தொடங்கி உள்ளனர். இந்தியாவிலும் பரவ தொடங்கியதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் பேசியபோது, “கேரளத்தில் குறைவான எண்ணிக்கையிலே(727 பேர்) கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மாநில அளவில் ஆலோசனை மேற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள ஒமிக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7(LF7) என்ற வைரஸ்தான் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளது .
சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களிலும் பயணங்களிலும் முகக்கவசம் அணிவது நல்லது. மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கேரளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை சுகாதாரத் துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
மழைக்காலம் என்பதால் தொற்று நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதர்களிடம் இருந்து நீர், மண் மூலமாக மற்றவருக்கு பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் பாக்டீரியா தொற்றைத் தடுக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே பருக வேண்டும்" என்று அறிவுறுத்தினார். கேரளாவில் புதிதாக 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,147 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.