தொகுதி மறுவரையறை மசோதா சர்ச்சை: தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு என சு. வெங்கடேசன் விமர்சனம்
மறுவரையறை ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது - மதுரை எம்பி சு. வெங்கடேசன்
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்றும், இதற்கு எதிராகத் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடுவார்கள் என்றும், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து சு. வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசியல் சாசன 131-ஆவது திருத்த மசோதா வரைவு, தென்னிந்தியாவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற போர்வையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா, உண்மையில் தொகுதி மறுவரையறை மற்றும் எண்ணிக்கையைச் சார்ந்தது. 534 ஆக இருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மிகப்பெரிய அளவில் குறையும். இதன் மூலம் இந்திய அரசியலில் தென்னிந்தியா அநாதையாக மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது" எனச் சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், "மறுவரையறை ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது. மோடியும் அமித்ஷாவும் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த மசோதாவில் இல்லை. தமிழ்நாட்டை ஒரு அரசியல் காலனியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது" எனக் குற்றம் சாட்டினார்.
இந்த அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், குறிப்பாகத் திமுக கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் மிக வலிமையாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என உறுதி அளித்தார். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பாஜகவின் இந்த அநீதிக்கு எதிரான போராட்டக் களமாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தேர்தலைச் சந்திக்கிற நேரத்தில் ஏன் இந்தக் கூட்டத்தொடரை நடத்துகிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்கு இந்த மாநிலங்கள் ஒரு பொருட்டல்ல. கடந்த ஐந்து நாட்களாக அமித்ஷா எந்தப் பிரச்சாரத்திற்கும் போகாமல் இந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தைக் காக்கிற இந்தப் போராட்டத்தில் மொத்த தமிழ்நாட்டு மக்களும் இணைய வேண்டும்." என்றார்..!
ட்ரெண்டிங் செய்திகள்





















