இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  சென்னையில் சென்டிரலில் இருந்து வருகிற 13-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06151) மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து வருகிற 14-ந்தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06152) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

இந்த ரெயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 2 ஈரடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி பெட்டிகளும், 5 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி பெட்டிகளும், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.