மாவட்ட நீதிபதியின் திட்ட அறிக்கையை செயல்படுத்தவும். ஆயுதப் படை போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தவும், மெட்டல் டிடெக்டர் பொருத்தவும், கண்காணிப்பு காமிரா பொருத்த கோரிய வழக்கில், மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகி நிவாரணம் பெற்று கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 






 

மதுரையை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016ல் தாக்கல் செய்த மனு.

 

அதில், "மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்திற்கு பல்வேறு குற்றங்கள் தொடர்பானவர்கள் கொண்டு வரப்படுகின்றனர். 

எனவே, அதிகப்படியான பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால் தற்போதைய பாதுகாப்பு போதுமானதாக இல்லை. 

மாவட்ட நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த திட்ட அறிக்கையை மாவட்ட நீதிபதி அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். 

 

இந்த பரிந்துரைகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. எனவே, உயர்நீதிமன்றம் தலையிட்டு மாவட்ட நீதிபதியின் திட்ட அறிக்கையை செயல்படுத்தவும். ஆயுதப் படை போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தவும், மெட்டல் டிடெக்டர் பொருத்தவும், கண்காணிப்பு காமிரா பொருத்தவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு, தேவையான அடிப்படை கட்டமைப்பு  ஆகியவை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகி நிவாரணம் பெற்று கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.